விஜய் பிறந்தநாளை நல்வாழ்வு தினமாக கொண்டாட ரசிகர்கள் முடிவு

நடிகர் விஜய்-க்கு வருகிற ஜூன் 22-ந் தேதி பிறந்தநாள். விஜய் தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஏழை-எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அவரது ரசிகர்களும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வருகிற ஜூன் 22-ந் தேதி விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நல்வாழ்வு தினம் என்ற பெயரில் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அன்றைய தினத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மேலும், அன்றைய தினத்தில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவர இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு வருகிற ஜூன் 22-ந் தேதி இரட்டிப்பு விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தன்னுடைய பிறந்தநாளை எப்போதும் ரசிகர்களும் கொண்டாடும் விஜய், கடந்த இரண்டு வருடங்களாக அதை தவிர்த்து வருகிறார். அதேபோல், இந்த வருடமும் தனது ரசிகர்களுடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்துள்ள அவர், ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் ஓய்வெடுப்பதற்காக லண்டன் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply