சிம்பு, அனிருத் ஆபாச பாடல்: தமிழருவி மணியன்-கவிஞர் தாமரை கண்டனம்

சிம்பு, அனிருத் ஆபாச பாடல்: தமிழருவி மணியன்-கவிஞர் தாமரை கண்டனம்

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக வெளியான ஆபாச பாடலுக்கு கண்டனம் தெரிவித்து காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ் திரைப்பட உலகில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தெய்வீக மணம் கமழும் பாடல்கள் பாபநாசம் சிவன் போன்றவர்களால் தரப்பட்டன. அதற்கடுத்து உடுமலை நாராயண கவியின் சிந்தனையில் சீர்திருத்த பாடல்கள் வெளிப்பட்டன. சென்ற தலைமுறையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் தத்துவ பாடல்கள் தந்தார். பின்னர் கண்ணதாசன் பாடல்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டன. வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்றவர்கள் அற்புதமான பாடல்கள் தந்தார்கள்.

இளையராஜாவும், வைரமுத்துவும் கைகோர்த்த பிறகு சாகாவரம் பெற்ற நல்ல பாடல்கள் கிடைத்தன. ஆனால் இன்று இளையதலைமுறையை சீரழிப்பதற்காகவே தரம் தாழ்ந்த திரைப்பாடல்கள் வருகின்றன. கானா பாடல்கள், குத்துப்பாடல்கள் என்ற பெயரில் விகாரமான அருவருப்பான பாடல்கள் வருகின்றன.

சமூக பொறுப்புணர்வு மிக்கவர்கள் மவுனமாக செயலற்று கிடந்ததன் விளைவுதான் இன்று சிம்பு-அனிருத் கூட்டணியில் வெளிப்பட்டிருக்கும் அருவருப்பும் ஆபாசமும் நிறைந்த கேவலமான பீப் பாடல். குத்துப்பாடல்களுக்கும் கானா பாடல்களுக்கும் திரையுலகம் முற்றாக விடை தர வேண்டிய தருணம் வந்து விட்டது. சிம்புவும், அனிருத்தும் பெண்மையை இழிவுபடுத்திய சமூக குற்றத்துக்காக நீதி மன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- சிம்பு-அனிருத் பாடல் குறித்து என்னிடம் கருத்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நானும் அந்த பாடலை கேட்டு வைத்தேன். இதில் நான் கருத்து சொல்ல என்ன இருக்கிறது என்று தோன்றியது. இப்படி எழுதலாமா? பெண்களை இழிவுபடுத்தலாமா? சமூக சீரழிவு என்றெல்லாம் பேசுகிறார்கள், அடப்பாவிகளா, நானும் இதைத்தானே இருபது ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போதுதான் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல் பொங்குகிறார்களே. நான் சொன்னது மட்டுமல்ல, செய்தும் காட்டி இருக்கிறேன். நீண்ட நெடிய 18 ஆண்டுகள் ஆபாசமாக எழுத மாட்டேன். அருவருக்கத்தக்க வரிகள் தரமாட்டேன். சமூகத்தை கெடுக்கும் பாடல் எழுத மாட்டேன். பாடல்கள் மட்டுமல்ல. காட்சிகள், வசனங்கள், நடிகர்களின் உடல்மொழி எதிலும் ஆபாசம் கூடாது என்று வலியுறுத்தி வந்து இருக்கிறேன். இதற்காக எனக்கு தனிப்பட்ட முறையில் பல இழப்புகள்.

ஆனாலும் என் நிலைப்பாட்டில் சமரசம் இல்லை. நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதான் இப்போது கிடைத்து இருக்கிறது. நல்ல பாடல் வரவேண்டும் என்று இந்த சமூகம் விரும்பி இருந்தால் தாமரைபோல் ஒரு பத்து பேராவது வந்து இருக்க வேண்டாமா. ஒருவர் கூட இல்லையே அப்புறமென்ன ஐயோ திரைப்பட பாடல்கள் சமூகத்தை சீரழிக்கின்றன என்ற ஒப்பாரி. உண்மை என்னவெனில் தாமரைகள் இந்த சமூகத்துக்கு தேவை இல்லை.

நல்லனவற்றை கொண்டாட தெரியாத பாதுகாத்து வைத்துக்கொள்ளாத சமூகத்துக்கு அல்லனதானே கிடைக்கும். சமூகத்தில் எல்லா துறையிலும் சீரழிவு. சினிமா மட்டும் சீலத்தோடு இருக்க வேண்டுமா? சிம்புவும் அனிருத்தும் வேற்றுகிரகவாசிகளா? இந்த சமூகத்தில் இருந்துதானே அவர்களும் வந்தார்கள் அறம், விழுமியங்கள் அழிந்த சமூகத்துக்கு அறம், விழுமியங்கள் அற்ற படைப்புகள்தான் கிடைக்கும்

இவ்வாறு தாமரை கூறி உள்ளார்.