ஷாருக்கான், ரன்வீர் சிங் படங்களுக்கு எதிர்ப்பு: இந்து சேனா, பா.ஜனதாவினர் போராட்டம்

ஷாருக்கான், ரன்வீர் சிங் படங்களுக்கு எதிர்ப்பு: இந்து சேனா, பா.ஜனதாவினர் போராட்டம்

இந்தி நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் சகிப்பின்மை குறித்து தெரிவித்த கருத்து மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஷாருக்கான் நடிப்பில் தயாரான ‘தில்வாலே’ படம் நேற்று நாடு முழுவதும் திரைக்கு வந்தது.

இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சேனா அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை தாதரில் உள்ள வணிக வளாக தியேட்டரில், ‘தில்வாலே’ படம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது, இந்து அமைப்பை சேர்ந்த சிலர், நடிகர் ஷாருக்கானுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அங்கு ஆக்ரோஷத்துடன் வந்தனர். மேலும், அவர்கள் தியேட்டருக்குள் நுழைய முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்து தாதர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங், நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோரது நடிப்பில் தயாரான ‘பாஜிராவ் மஸ்தானி’ திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. இது வரலாற்று கால காதலை சித்தரிக்கும் படமாகும். இந்த படத்தில் மராட்டியத்தை சேர்ந்த போர்வீரர் பேஷ்வா பாஜிராவ் மற்றும் அவரது 2-வது மனைவி சம்பந்தமான நிகழ்வுகளை திரித்து வெளியிட்டதாக கூறி, புனேயில் அப்படம் வெளியான தியேட்டர்கள் முன்பு 300-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா தொண்டர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், புனேயில் பல தியேட்டர்களில் அந்த படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர, எதிர்ப்பு காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களான போபால், இந்தூர், ஜபல்பூரில் ‘தில்வாலே’ படம் வெளியாகவில்லை. அங்கும் அப்படத்துக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த படம் வெளியாவதில் தடை ஏற்பட்டது.