பாகுபலி படம் நாளை உலகம் முழுவதும் 4000 தியேட்டரில் ரிலீஸ்

பாகுபலி படம் நாளை உலகம் முழுவதும் 4000 தியேட்டரில் ரிலீஸ்

இந்திய திரையுலக வரலாற்றில் அதிக பொருட்செலவில் ‘பாகுபலி’ திரைப்படம் தயாராகியுள்ளது. மொத்தம் ரூ.250 கோடி செலவிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.

சரித்திர படம் என்பதால் அரண்மனை அரங்குகள், யுத்த தளவாடங்கள், வரலாற்றுகால ஆடை, ஆபரணங்கள் என இதில் பயன்படுத்தி உள்ளனர். இப்படத்தை ராஜமவுலி இயக்கியுள்ளார். இவர் ‘மகதீரா’, ‘நான் ஈ’, போன்ற படங்கள் எடுத்து பிரபலமானவர். பாகுபலி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதில் பிரபாஸ், ராணா, கதாநாயகர்களாக நடித்துள்ளனர். அனுஷ்கா, தமன்னா கதாநாயகிகளாக வருகிறார்கள். சத்யராஜ், நாசர் போன்றோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மகாபாரத கதையை படித்த போது பாகுபலி படத்தை உருவாக்கும் உந்துதல் ஏற்பட்டது என்று ராஜமவுலி கூறினார். இந்த படம் என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்றார்.

பிரபாஸ் மூன்று வருடங்கள் இந்த படத்துக்கு உழைத்துள்ளார். இந்த கால கட்டங்களில் வேறு படங்களில் நடிக்காததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது. பணம் முக்கியமல்ல இந்த படத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன் என்றும் அவர் கூறினார்.

பாகுபலி பட டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படப்படுகிறது. தமிழகம் முழுவதும் 500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்கிறது.

ஹாலிவுட் படங்கள் தரத்தில் ‘பாகுபலி’ படத்தை எடுத்துள்ளனர் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டி உள்ளார். ஒரு நாட்டின் அதிகாரத்தை பிடிக்க இரு சகோதரர்களுக்குள் நடக்கும் யுத்தமே படத்தின் கதை. கீரவாணி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.