கவிஞருடன் கைகோர்த்து உணவகம் தொடங்கும் கஞ்சா கருப்பு

கவிஞருடன் கைகோர்த்து உணவகம் தொடங்கும் கஞ்சா கருப்பு
பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பிதாமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. தொடர்ந்து, ‘ராம்’, ‘பருத்தி வீரன்’, ‘சுப்பிரமணியபுரம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி வேடத்தில் கலக்கிய கஞ்சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகவே, தற்போது தயாரிக்கும் பணியை ஓரங்கட்டிவிட்டு, ஒரு சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது அமீர் நடிக்கும் புதிய படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், புதிதாக உணவகம் தொடங்கும் முடிவையும் கஞ்சா கருப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, ஜெயங்கொண்டான் என்பவர் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் சென்னை கே.கே.நகரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில், சினிமா மீது ஆர்வம்கொண்ட ஜெயங்கொண்டான், சினிமாவில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததால், வயிற்று பிழைப்புக்காக உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். பின்னர், தனியாக உணவகம் ஒன்றை தொடங்கி, சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்து வந்தார். இன்றும் செய்து வருகிறார்.

அதேபோல், கஞ்சா கருப்புவும் ஆரம்பத்தில் ஓட்டலில் பணிபுரிந்த அனுபவம் இருப்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெயங்கொண்டானின் உணவகத்திற்கு சென்று, அவருக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு, இவர்கள் சொந்தமாக உணவகம் வைக்கும் அளவுக்கு தொடர்ந்துள்ளது. இருவரும் இணைந்து வளசரவாக்கத்தில் ஒரு மிகப்பெரிய உணவகத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக வளசரவாக்கம் பகுதியில் இடம் தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வருகிற தை மாதத்தில் இந்த உணவகத்தை திறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயங்கொண்டான் தமிழ் சினிமாவில் ‘குலசாமி’, ‘இந்திரசேனா’, ‘சோக்குசுந்தரம்’, ‘காட்டு மல்லி’ உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும், சில டப்பிங் படங்களும் பாடல்கள் எழுதியுள்ளார். கஞ்சா கருப்புவும், ஜெயங்கொண்டானும் கடந்த 8 வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.