குழந்தைகளை சிரிக்க வைக்கும் படங்களில் நடிக்காதது வருத்தம்: சூர்யா

குழந்தைகளை சிரிக்க வைக்கும் படங்களில் நடிக்காதது வருத்தம்: சூர்யா

 
நடிகர் சூர்யா தயாரித்துள்ள புதிய படம் ‘பசங்க 2’. இதில், அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். அமலாபால், பிந்து மாதவி, வித்யா ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் பல குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். பாண்டிராஜ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், சூர்யா பங்கேற்று பேசியதாவது:-

‘பசங்க 2’ குழந்தைகள் படமாக தயாராகியுள்ளது. இதில், சிறுவர்கள் திறமையாக நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையை பாண்டிராஜ் சொன்னபோதே பிடித்தது. எனக்கு இது முக்கிய படமாக இருக்கும். ஏற்கனவே வந்த ‘பசங்க’ படத்தின் கதை கிராமத்து சிறுவர்களை சார்ந்ததாக இருந்தது. ஆனால், இந்த ‘பசங்க 2’ படம் நகரத்து சிறுவர்கள் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பற்றிய நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கும். குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்கவேண்டும் என்ற கருத்தும் இருக்கும்.

குழந்தைகளை படிப்பில் மட்டும் தீவிரப்படுத்தாமல், அவர்களிடம் இருக்கும் திறமைகளையும் வளர்க்கவேண்டும் என்ற விஷயத்தையும் பதிவு செய்துள்ளோம். நான் இந்த படத்தில் நடிப்பதற்காக சாதாரணமாகத்தான் சென்றேன். நடிக்க தொடங்கியதும் கதை உள்ளே இழுத்துக்கொண்டது. நாகேஷ், ஹாலிவுட் நடிகர்கள் ஜிம் கேரி, ராபின் வில்லியம்ஸ் ஆகியோரைப்போல் குழந்தைகளை சிரிக்க வைக்கும் படங்களில் இதுவரை நடிக்காமல் இருந்தது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பெற்றோர், குழந்தைகள் அனைவரும் பார்க்கும் படமாக இது இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, ‘குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும் என்று பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படம் பாடமாக இருக்கும். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பசங்க 2’ படம் வெற்றி பெறும்’ என்றார். விழாவில், நடிகர்கள் சிவகுமார், நாசர், விமல், நடிகைகள் ஜோதிகா, அமலாபால், பிந்து மாதவி, டைரக்டர்கள் பிரபு சாலமன், விஜய், சீனு ராமசாமி, பாண்டிராஜ், ராம், இசையமைப்பாளர்கள் தாஜ்நூர், ஆரல் கோரலி ஆகியோர் கலந்துகொண்டனர்.