கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வது சரியா, தவறா? நடிகர் தனுஷ் பேட்டி

கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வது சரியா, தவறா? நடிகர் தனுஷ் பேட்டி

‘வேலையில்லா பட்டதாரி,’ ‘அனேகன்’ படங்களை அடுத்து தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் புதிய படம், ‘மாரி.’ இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து இருக்கிறார். பாலாஜி மோகன் டைரக்டு செய்திருக்கிறார்.மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘மாரி’ படத்தை பற்றியும், அடுத்து அவர் தயாரிக்கும் படங்கள் பற்றியும் நிருபருக்கு தனுஷ் பேட்டி அளித்தார். அப்போது நிருபர் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு தனுஷ் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘மாரி,’ எந்த மாதிரியான படம், என்ன கதை, அதில் என்ன கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறீர்கள்?

பதில்:- ‘மாரி,’ காதல்-நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜனரஞ்சகமான படம். சென்னையில் நடக்கிற கதை. மாரி என்பது என் கதாபாத்திரத்தின் பெயர். அவன் ஒரு ‘லோக்கல்’ தாதா.

கேள்வி:- ஒரு கதாநாயகன், இந்த கதைக்கு இந்த கதாநாயகி பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர்-டைரக்டரிடம் யோசனை சொல்வது சரியா, தவறா? நீங்கள் அப்படி சிபாரிசு செய்தது உண்டா?

பதில்:- என்னைப் பொருத்தவரை, நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்ததில்லை. அதை டைரக்டர் முடிவுக்கே விட்டு விடுகிறேன். கதாநாயகிகள் விஷயத்தில், நான் தலையிடுவதில்லை. எந்த யோசனையும் சொல்வதில்லை. ஒரு சில படங்களில், என் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? என்பதை படப்பிடிப்பு தளத்துக்கு போனபின்தான் தெரிந்து கொண்டிருக்கிறேன். ‘மரியான்’ படத்தில் அப்படித்தான் நடந்தது. படப்பிடிப்பு தளத்துக்குப் போன பிறகுதான் அந்த படத்தின் கதாநாயகி பார்வதி என்று எனக்கு தெரிய வந்தது.

கேள்வி:- உங்கள் மனைவி ஐஸ்வர்யா டைரக்ஷனில் நீங்கள் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அதற்கு ஐஸ்வர்யா எனக்காக கதை எழுத வேண்டும். அந்த கதை எனக்கு பிடித்திருந்தால், நடித்தாலும் நடிக்கலாம்.

கேள்வி:- அவருடைய டைரக்ஷனில் நடிக்க ஏன் தயக்கம்?

பதில்:- ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடித்தால், இரண்டு பேருமே வீட்டில் இருக்க முடியாது. யாராவது ஒருவர் வீட்டில் இருந்தால்தான் குழந்தைகளை கவனிக்க முடியும். வேறு ஒன்றுமில்லை.

கேள்வி:- குழந்தைகள் இருவரும் எந்த வகுப்பு படிக்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், அவர்கள் இரண்டு பேருக்கும் எதில் ஆர்வம் இருக்கிறது?

பதில்:- பெரிய பையன் நான்காவது வகுப்பு படிக்கிறான். சின்ன பையன் யு.கே.ஜி. படிக்கிறான். இரண்டு பேருக்குமே விளையாட்டு, நடனம், இசை ஆகிய மூன்றிலும் ஆர்வம் இருக்கிறது. படிப்பிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இரண்டு பேரும் சந்தோஷமாக வளர்கிறார்கள்.

கேள்வி:- உங்கள் அப்பா (டைரக்டர் கஸ்தூரிராஜா) ஒரு பக்கம், அண்ணன் (டைரக்டர் செல்வராகவன்) ஒரு பக்கம், நீங்கள் ஒரு பக்கமாக தனித்தனியாக வசிக்கிறீர்களே…எப்போதாவது மூன்று பேரும் சந்தித்துக் கொள்வது உண்டா?

பதில்:- நாங்கள் தனித்தனியாக வசிப்பது, அப்பா கொடுத்த ‘ஐடியா’தான். வாழ்க்கையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அப்பா சொன்னபடி, தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறோம். இது, நீச்சல் கற்றுக் கொள்வது மாதிரிதான்…

கேள்வி:- இந்தி படங்களில் நடிப்பது அதிக சம்பளத்துக்காகவா, பெரிய அளவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவா?

பதில்:- இரண்டுமே கிடையாது. தமிழ் படங்களை விட, இந்தி படங்களுக்கு குறைந்த சம்பளம்தான் வாங்குகிறேன். சினிமாவுக்கு இன-மொழி பேதம் கிடையாது. அந்த வகையில், இன்னொரு மொழியில் நடித்தோம் என்ற திருப்திக்காகவே இந்தி படங்களில் நடிக்கிறேன். அடுத்து ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்காக காத்திருக்கிறேன். இதற்காக பத்து பதினைந்து கதைகள் கேட்டு இருக்கிறேன்.

கேள்வி:- தென்னிந்திய கதாநாயகர்கள் என்றால் இந்தி பட உலகில் உற்சாகப்படுத்துவதில்லை என்றும், அவர்களை விரட்டுவதற்கே முயற்சிப்பார்கள் என்றும் முன்பு ஒரு பேச்சு உண்டு. இப்போதும் இந்தி பட உலகம் இப்படித்தான் இருக்கிறதா?

பதில்:- நிச்சயமாக அப்படியில்லை. நான் நடித்து வெளிவந்த இரண்டு இந்தி படங்களுக்குமே அங்கே நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். இந்தி பட உலகை சேர்ந்தவர்கள் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள்.’’

இவ்வாறு தனுஷ் கூறினார்.