வரதட்சணை கொடுமையும்: நகைவெறி பிடித்தலையும் பெண்களும்

வரதட்சணை கொடுமைக்கு முக்கிய காரணமே பெண்கள் தான். அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் ஆண்கள் அது இது என்று சும்ம தட்டையாக மற்றவர்களின் மீது பழிபோட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து திருமணம் முடியும் வரை “பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்க..” என்று வெறி கொண்டு அலைவது எல்லாம் பெண்கள் தான்.
மணமகனும், அவரது தந்தையும் வேண்டாம் என்றால் கூட மணமகனின் தாயாரும், சகோதரிகளும் விடுவதில்லை.

அடிப்படையில் பெண்கள் அனைவருக்குமே நகை மோகம் எல்லை கடந்து நிற்கிறது. (விதிவிலக்குகள் ஒன்றிரண்டு இருக்கலாம்.. ) அவர்களின் நகைமோகம் தான் ஒவ்வொரு நகைக்கடைக்கும் பெண்களை அலைய வைக்கிறது. ஏழை பெண்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்துப்பாருங்கள்.. நகைகள் வாங்கி அலங்கரிக்கவே விரும்புவார்கள்.
இந்த மோகம் எப்படி வந்தது என்ற வரலாற்று பின்புலங்கள் பல உண்டு. இயல்பிலேயே பெண்கள் அலார்ட்டானவர்கள் (insecure)

எதிர்காலம் குறித்த கணிப்பு.. துணைவன் விட்டுவிட்டு போனால்.. என்றெல்லாம் ஆரம்பித்து ஒரு சிறு பாதுகாப்புக்காக என்று ஆரம்பித்த விசயம் இன்று ஸ்டேட்டஸ் சிம்பலாக மாற்றப்பட்டு கிலோ கணக்கில் பெண்களிடமிருந்து எதிர் தரப்பு பெண்களால் வாங்கிக் கொள்ளப்படுகிறது.

வீட்டில் தங்க நகை இருப்பது என்பது ஆத்திர அவசரத்திற்கு பணமாக மாறி உதவி புரியும் என்பதுதான் இந்த கொடுத்தலின் அடிப்படை. ஆனால் காலப்போக்கில் அது கவுரவம் சார்ந்ததாக மாற்றப்பட்டுவிட்டது.

ஒன் மருமவ எவ்வளவு போட்டுட்டு வந்துருக்கா.. என்ற கேள்வியை மாமியார்களான பெண்கள் மிகப்பெரும் கவுரவம் சார்ந்த கேள்வியாகவே எதிர்கொள்கிறார்கள்.
அப்படினா அம்பளைங்க எல்லாம் அம்புட்டு நல்லவியிங்களாடா… என்று கேட்டால், நல்லவங்க இல்ல தான்.. ஆனால் இதில் முக்கிய ரோல் வகிப்பது பெண்கள் தான்.

அதேப்போல் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதிகம் படித்த பையன் தன்னை விட படிப்பில் குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது சகஜமாக இருக்கிறது. ஆனால் ஒரு டிகிரி படித்த பெண் பத்தாம் வகுப்பு படித்த பையனை திருமணம் செய்து கொள்வதில்லை. அங்கு அந்த அம்மணிகளுக்கு ப்ரஸ்டிஜ் குக்கர் எல்லாம் வந்துவிடுகிறது.

தன் படிப்பை விட மேலே படித்தவனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற பெண்களின் இந்த ஈகோ உளவியல் மாறும்போதும் இந்த கொடுமை முடிவுக்கு வரும்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது.. ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்கு தானே தெரியும் என்றெல்லாம் கதை வசனம் விடாமல்,
தான் பட்ட கஷ்டம் தன் வீட்டுக்கு வரும் இன்னொரு பெண் படக்கூடாது என பெண்கள் நினைத்தால் வரதட்சணை பிரச்னை முடிந்துவிடும். ஆனால் அப்படி நினைக்கும் பெண்கள் வெகுக்குறைவு. வரதட்சணையை ஒழிக்க விரும்புவர்கள் செய்ய வேண்டிய பிரச்சாரம் பெண்களிடம் தான்.

இதை எவனாவது சொன்னா.. “என்னவொரு ஆணாதிக்க வெறி பார்த்தீங்களா..” என்று எல்லா பழியையும் தூக்கி ஆண்கள் மீது போட்டுவிட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் போராளிகள்..

-கார்ட்டூனிஸ்ட் பாலா