பட்டங்கள் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை: கமல்ஹாசன் பேட்டி

பட்டங்கள் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை: கமல்ஹாசன் பேட்டி

கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பேசியதாவது:-
இது ஒரு வித்தியாசமான விழா. இந்த விழாவை நடத்த வேண்டுமா? என யோசித்தேன். ஆனாலும், 40 நாட்களில் ஒரு நல்ல படம் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளரும் லாபம் அடைந்துள்ளார். எனவே வெற்றி விழாவை நடத்துவது ஏற்கத்தக்கது தான். சில படங்களில் வியாபார ரீதியாக சமரசம் செய்துகொள்வதுண்டு. ஆனால் ‘பாபநாசம்’ படம் அப்படி அல்ல. எங்களுக்கு மன திருப்தியை அளித்துள்ள படம். இதை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

என் படத்தை மட்டுமின்றி, நல்ல படங்களை தூக்கி பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் சிறந்த படங்கள் வர வாய்ப்பு ஏற்படும். ‘பாபநாசம்’ படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ‘திரிஷ்யம்’ படத்தை தமிழில் ‘ரீ-மேக்’ செய்ய முடிவெடுத்ததும், இந்த படத்துக்கு கமல்ஹாசன் பொருத்தமாக இருப்பார் என்று மோகன்லால் கூறி உள்ளார். அவரது பெருந்தன்மைக்கும், பரிந்துரைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். படப்பிடிப்பு முடியும் வரை படக்குழுவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டனர்.

படப்பிடிப்பு முடிந்து பிரியும்போது, கண்கள் நனைந்தது. இந்த படத்தில் நடித்த பலர் எனது அடுத்த படமான தூங்காவனம் படத்திலும் நடிக்கிறார்கள். அத்தனை பேருமே திறமையானவர்கள். என் கதாபாத்திரம் மட்டுமின்றி, மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக இருந்தால் தான் படம் வெற்றி பெறும். இந்த படத்தில் அது அமைந்தது. வியர்வைக்கு பரிசாக வெற்றி கிடைத்துள்ளது.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சொந்தமாக கதை எழுதி வைத்துள்ளீர்களா? அப்படி எழுதி இருந்தால், அதை ‘பாபநாசம்’ பட இயக்குனர் ஜீத்து ஜோசப்பை வைத்து டைரக்டு செய்வீர்களா?

பதில்:- சினிமாவுக்கு மொழி கிடையாது. அப்படி இருந்தால் எம்.ஜி.ஆர். நமக்கு கிடைத்து இருக்கமாட்டார். திறமைதான் சினிமாவுக்கு முக்கியம். தமிழன், மலையாளி என்பதெல்லாம் விலாசம் தான். அது திறமை ஆகாது. நான் பரமக்குடியில் பிறந்து இருந்தாலும், பாதி மலையாளி தான். கேரளாவில் கேட்டால் என்னை முழு மலையாளி என்றே சொல்வார்கள். அந்த அளவுக்கு எனக்கு அங்கே வரவேற்பு உள்ளது. கதைகள் நிறைய வைத்திருக்கிறேன்.

கேள்வி:- ‘திரிஷ்யம்’ படத்தில் மீனா நடித்தார். ‘பாபநாசம்’ படத்தில் கவுதமி நடித்துள்ளார். இவர்களில் யார் சிறப்பாக நடித்து உள்ளார்?

பதில்:- கவுதமி சிறப்பாக நடித்து உள்ளார் என்றால் மீனா முகத்தை திருப்பி வைத்துக்கொள்வார். கவுதமியை தினமும் பார்க்கிறேன். இவரை சமாதானம் படுத்திவிடலாம். மீனாவுடன், நான் படங்கள் நடிக்க நேரும்போது சிக்கல் வரும். எனவே இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

கேள்வி:- உங்களை ‘உலக நாயகன்’ என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் போலீசிடம் நீங்கள் அடி-உதை வாங்குவது போல் காட்சி உள்ளதே?

பதில்:- என்னை நான் குழந்தையாக பார்த்து இருக்கிறேன். எனது பெயர் நடிகன். கமல் என்று அழைக்கும்போது, வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது. பட்டங்கள் நூல் கட்டாமல் பறப்பது. ரசிகர்களால் அன்போடு கொடுக்கப்பட்டது. தாய்மார்கள் என்னை சந்திக்கும்போது, அன்போடு நெற்றியில் விபூதி வைக்கின்றனர். அவர்களிடம், பகுத்தறிவு பேசிக்கொண்டு இருக்க முடியாது. ‘உலகநாயகன்’ என்ற பட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. நல்ல நடிகன் என்று பேசப்படுவதே போதுமானது.

கேள்வி:- ‘பாபநாசம்’ படத்துக்கு வரிச்சலுகை அளிக்க மறுக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் சரிதானா?

பதில்:- ஆமாம். சரியான காரணம் தான்.

கேள்வி:- ‘பாபநாசம்’ படம் இணையதளத்தில் வெளியாகி விட்டதே?

பதில்:- திண்டுக்கல் பூட்டு செய்யும் போதே, சாவியையும் கண்டுபிடித்து விடுவார்கள். ‘பாபநாசம்’ படத்தை இணையதளத்தில் வெளியிட்டும் நாசம் செய்துள்ளனர். அதை ‘டவுன்லோடு’ செய்தும் பார்க்கிறார்கள்.

கேள்வி:- நடிகர் சங்க விவகாரத்தில் பெரிய நடிகர்கள் அமைதியாக இருக்கிறீர்களே?

பதில்:- என்னிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், நடிகர்கள் டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், கலாபவன் மணி, வையாபுரி, நடிகைகள் கவுதமி, ஸ்ரீப்ரியா, டைரக்டர் ஜீத்து ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.