அவெஞ்சர்ஸ் – திரை விமர்சனம் | Avengers – Screen Review

அவெஞ்சர்ஸ் குழுவிலுள்ள சூப்பர் ஹீரோவான அயன்மேன் எதிர்காலத்தில் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து மனித இனத்தை காப்பாற்றுவதற்காக சிந்திக்கும் திறனுடைய ரோபோ படையை உருவாக்க முயற்சிக்கிறார்.

அல்ட்ரான் எனப்படும் அந்த ரோபோ உலகின் ஒட்டுமொத்த அமைதியையும் சீர்குலைத்து வருவது மனிதம் இனம்தான் என ரோபோ கணித்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் அழிக்க முடிவு செய்கிறது.

அல்ட்ரானை மனிதர்களுக்கு எதிராய் திருப்பும் குழுவில் குவிக் சில்வர், ஸ்கேர்லெட் விட்ச் என இரண்டு சக்தி வாய்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களது திட்டப்படி முதலில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களை அழித்துவிட்டால் மனிதர்களை எளிதில் பூமியிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள்.

இதனால் ஸ்கேர்லெட் விட்ச் தனது சக்தியின் மூலம் ஹல்க்கின் மூளையை தன் வசப்படுத்தி நகரத்தை அழிக்க அனுப்புகிறாள். மூர்க்க குணத்துடன் ஹல்க் தனது அசுரத் தாக்குதலை நகர மக்கள் மீது தொடுக்க, அதனை அயன்மேன் தன் கவச மனிதர்கள் மூலம் கட்டுப்படுத்துகிறார்.

இறுதியில் அல்ட்ரான் படைகளிடமிருந்து அவெஞ்சர்ஸ் எப்படி தப்பித்தார்கள்? மனித இனத்தை அல்ட்ரான்களிடமிருந்து எப்படி காப்பாற்றினார்கள்? என்பதே மீதிக்கதை.

ஒரேயொரு சூப்பர் ஹீரோ நடித்த ஹாலிவுட் படமென்றாலே அப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்தில் ஒட்டுமொத்த ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களும் ஒன்றிணைந்து நடித்திருப்பதால் படம் ரொம்பவும் பிரம்மாண்டமாக இருக்கின்றது. அயன்மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, பிளாக் விடோ, ஹாக் ஐ, வார் மெஷின் என முக்கிய சூப்பர் ஹீரோக்களே அவெஞ்சர்ஸ் குழு.

இப்படத்தில் தொழில்நுட்பங்களை ரொம்பவும் திறமையாக கையாண்டுள்ளனர். அல்ட்ரான் எனப்படும் ரோபோக்கள் படை ஒரு நகரத்தை பூமியோடு பெயர்த்து எடுத்து அந்தரத்தில் தூக்கிச் செல்லும் காட்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதுவும் இப்படத்தை 3டியில் பார்க்கும்போது நம் கண்ணெதிரே நடப்பது அவ்வளவு துல்லியமாக இருக்கிறது.

கதை வழக்கமானதுதான் என்றாலும், நம்மால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத விஷயங்களை இந்த அவெஞ்சர்ஸ் 2-ம் பாகம் செய்திருக்கிறது.

இந்த படத்தில் வெறும் ஆக்ஷன் மட்டுமில்லாமல் சின்னச் சின்ன காமெடிகளையும் சூப்பர் ஹீரோக்கள் செய்வது படத்திற்கு கூடுதல் பலம்.

ஸ்டேன் லீயுடன் இணைந்து எழுதிய காமிக்ஸ் புத்தகத்ததையே ‘அவஞ்சர்ஸ்’ திரைப்படமாக எடுத்திருக்கிறார் ஜாஸ் வெடோன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் 2’ அற்புதம்

Leave a Reply