படம் வெளியாகும் முன்பே லாபத்தை ஈட்டிக்கொடுத்த காக்கா முட்டை: தனுஷ்

தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இப்படத்தின் இயக்குனர் மணிகண்டன், இப்படத்தில் நடித்த சிறுவர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இப்படத்தின் டிரைலரை தனுஷ், வெற்றிமாறன் வெளியிட இயக்குனர் மணிகண்டன் மற்றும் சிறுவர்கள் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, ‘காக்கா முட்டை படத்தில் நான் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் போது பல பேர் என்னிடம் ஏன் அம்மா வேடத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

மேலும் உங்களுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிடும் என்றும் கூறினார்கள். ஆனால் நான் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. நல்ல ஆக்டிங் ஸ்கோர் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆதலால் இப்படத்தில் நடித்தேன். இதில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது’ என்றார்.

வெற்றிமாறன் பேசும் போது, ‘இந்த ஸ்கிரிப்டை நான் முதலில் படித்தபோதே எனக்கு மிகவும் பிடித்தது. என் வாழ்க்கையில் நடந்த விஷயம் போல் இருந்தது. இந்த ஸ்கிரிப்டை தனுஷுக்கு அனுப்பினேன். தனுஷுக்கும் பிடித்ததால் சேர்ந்து பண்ணலாம் என்று முடிவு செய்தோம்.

இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று நம்பினோம். முதலில் இப்படத்தை வெளியிடுவதற்கு முன்னதாகவே பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தோம்.

அதற்கு தனுஷும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி பிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்பி விருதுகளை பெற்றோம். மேலும் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

தனுஷ் பேசும் போது, ‘இந்தப் படத்தில் இரண்டு சிறுவர்கள் நடித்திருப்பார்கள். அவர்களை பார்க்கும்போது சிறுவன் நானாகவும், பெரியவன் என் அண்ணனாகவும் எனக்கு இருந்தது. இந்த கதை என் வாழ்க்கையில் நிகழ்ந்த நினைவுகளை ஞாபகப்படுத்தியது. அதனால் இப்படத்தை தயாரிக்க முன் வந்தேன்.

இப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காக்கா முட்டை படமும், என்னுடைய தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விசாரணை’ படமும் வெளியாவதற்கு முன்பே எனக்கு லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது’ என்றார்.

Leave a Reply