கணிதன் (2016) – திரை விமர்சனம்

நடிகர் : அதர்வா
நடிகை :கேத்ரீன் தெரசா
இயக்குனர் :சந்தோஷ்
இசை :டிரம்ஸ் சிவமணி
ஓளிப்பதிவு :அரவிந்த் கிருஷ்ணா
தூர்தர்ஷன் சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஆடுகளம் நரேனுக்கு பிபிசி சேனலில் பணிபுரிய வேண்டும் என்பது நீண்டகால ஆசை. ஆனால் அது நிறைவேறாமலே இருக்கிறது.

இவரது மகனான அதர்வா இன்ஜினியரிங் படித்து விட்டு மனோபாலா நடத்தி வரும் தனியார் சேனலில் நிருபராக பணிபுரிந்து வருகிறார். தந்தையின் நிறைவேறாத கனவை நிறைவேற்றும்பொருட்டு தான் பிபிசி சேனலில் சேரவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் அதர்வா.

இந்நிலையில், மனோபாலாவின் மகளான கேத்ரின் தெரசாவுக்கும் அதர்வாவுக்கும் காதல் மலர்கிறது. ஒருநாள் போலி சர்டிபிகேட் மூலம் பல வங்கிகளில் பணம் வாங்கி ஏமாற்றி இருப்பதாக கூறி அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது.

முதலில் எதுவும் புரியாத அதர்வாவுக்கு, பின்னர் தன்னுடைய சர்டிபிகேட் மட்டுமல்லாமல், பல இளைஞர்களின் சர்டிபிகேட்டுகளும் இதுபோல் போலியாக எடுத்து பல வங்கிகளில் பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவருகிறது.

செய்யாத தவறுக்கு ஜெயிலுக்கு செல்லும் அதர்வா, அங்கிருந்து வெளியே வந்துபோலி சர்டிபிகேட் மூலம் பண வாங்கிய கும்பலை கண்டுபிடித்தாரா? தனது லட்சியமான பிபிசி சேனலில் சேர்ந்தாரா? கேத்ரின் தெரசாவை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தின் முதல் பாதியில் நிருபராகவும் இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் ஹீரோவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அதர்வா. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள இவர் எடுக்கும் முயற்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது. பாடல் காட்சிகளில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார்.

கேத்ரீன் தெரசா அவரது முந்தைய படமான ‘மெட்ராஸ்’, ‘கதகளி’ ஆகியவற்றில் பார்த்திராத ஒரு புத்துணர்ச்சியான கேத்ரீன் தெரசாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. கவர்ச்சியில் தாராளம் காண்பித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நரேன், பாக்யராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கும் தருண் அரோரா பார்வையாலேயே மிரட்டியிருக்கிறார். வில்லனுக்கு உண்டான தோற்றம் கொண்டு ஸ்டைலீஷாக நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஊடகம் சார்ந்த கதையை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் சந்தோஷுக்கு பாராட்டு. ஒரு நிருபருக்கு ஏற்படும் சிக்கல்களை அவர்களின் திறமைகள் மூலம் எப்படி எதிர்கொள்வது என்பதை சிறப்பாக காண்பித்திருக்கிறார். நிருபர் கதாபாத்திரத்திற்கு அதர்வாவை தேர்வு செய்தது சிறப்பு. போலி சான்றிதழ்களை வைத்து வைத்து செய்யும் தில்லுமுல்லுகளை அழகாகவும் தைரியமாகவும் சொல்லியிருக்கிறார்.

டிரம்ஸ் சிவமணியின் இசை படத்திற்கு பெரும் பலம். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கணிதன்’ தேர்ச்சி.