மந்திரி மாணியின் மகனுக்கு சரிதா நாயருடன் செக்ஸ் தொடர்பு: பி.சி. ஜார்ஜ் கடிதம்

கேரளாவில் மது பார் ஊழல் வழக்கில் புகார் கூறப்பட்ட நிதி மந்திரி மாணி மீது அவரது கட்சி துணைத்தலைவரும், அரசு கொறடாவாக இருந்த பி.சி. ஜார்ஜும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

ஊழலில் நிதி மந்திரிக்கு தொடர்பு இருக்கும் என்று பகிரங்கமாக விமர்சனமும் செய்தார். இதையடுத்து அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய மாணி, காங்கிரஸ் கூட்டணி அரசில் பி.சி. ஜார்ஜுக்கு வழங்கப்பட்ட அரசு கொறடா பதவியையும் பறிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இதுபற்றி ஆலோசித்த காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பி.சி. ஜார்ஜை அரசு கொறடா பதவியில் இருந்து நீக்கினர். பதவி பறிக்கப்பட்டதும், பி.சி. ஜார்ஜ், மந்திரிமாணி மீதும், அவரது மகனும், கோட்டயம் தொகுதி எம்.பி.யுமான ஜோஸ் கே. மாணி மீதும் பரபரப்பு புகார்களை கூறினார்.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தொழில் அதிபர் சரிதாநாயர், தனக்கு அரசியல் பிரமுகர்கள் பலரை தெரியும் என்றும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் கூறி இருந்தார்.

இது தொடர்பாக அரசுக்கு ஒரு ரகசிய கடிதமும் எழுதினார். இந்த கடிதத்தில், பல்வேறு அரசியல் பிரமுகர்களின் அந்தரங்க நடவடிக்கைகளை தெரியப்படுத்தி இருப்பதாக கூறி இருந்தார்.

அந்த கடிதத்தில், என்ன எழுதி இருந்தார்? என்பது அப்போது வெளியிடப்படவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரிதா எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி என சில தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.

அதில், மந்திரி மாணியின் மகனும், கோட்டயம் எம்.பி.யுமான ஜோஸ் கே. மாணி, சரிதாவுடன் பாலியல் தொடர்பு வைத்ததாகவும், இதற்காக அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும், கூறப்பட்டிருந்தது.

இதனை ஜோஸ் கே.மாணி மறுத்தார். தனது அரசியல் எதிரிகள் வேண்டுமென்றே இத்தகைய புகாரை கூறி இருப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் பேட்டி அளித்தார். சரிதா நாயரும் இந்த தகவலை ஏற்கவில்லை. ஜோஸ் கே. மாணியின் பெயர் தான் எழுதிய கடிதத்தில் இல்லையென மறுத்தார்.

ஜோஸ் கே. மாணி, சரிதா நாயர் இருவருமே இந்த தகவலை மறுத்தபோதும், இந்த சம்பவம் உண்மை என்றும், ஜோஸ் கே. மாணியின் பெயர் சரிதா நாயர் எழுதிய கடிதத்தில் இருக்கிறது என்றும் பி.சி. ஜார்ஜ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர், முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

மந்திரி மாணி, அவரது மகன் ஜோஸ் கே. மாணி இருவரும் ஊழல்வாதிகள். பட்ஜெட்டில் சலுகை அளிப்பதாக கூறி பலரிடமும் மாணி பணம் வாங்கி உள்ளார்.

ரப்பர் விலை கடும் வீழ்ச்சி அடைந்தபோது, கேரளா காங்கிரஸ் (எம்) கட்சி போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க ரப்பர் முதலாளிகளிடம் இருந்து பல கோடி பணம் வாங்கினார். இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது, பணத்தை திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த பணத்தை அவர் கடைசி வரை கொடுக்கவே இல்லை. சரிதா நாயர் எழுதிய கடிதத்தின் நகல் எனக்கு கிடைத்தது. அதை நான் முழுவதும் படித்தேன். கடிதத்தில் ஜோஸ் கே. மாணியின் பெயர் இருந்தது.

இதுபற்றி மந்திரி மாணியிடம் கூறியபோது, அவர் மகனை கண்டிப்பதற்கு பதில் காப்பாற்ற முயன்றார். மாவேலி கரையில் உள்ள ஒரு வீட்டில் சரிதா நாயரை ரகசியமாக சந்தித்து மகனின் பெயரை எக்காரணம் கொண்டு வெளியிடக்கூடாது என கெஞ்சி கேட்டுக் கொண்டார். இதற்காக சரிதாவுக்கு பணம் கொடுத்தார்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறி இருந்தார்.

Leave a Reply