சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – திரை விமர்சனம்

வேலை தேடி சென்னைக்கு வருபவர்களின் வாழ்வில் ஏற்படும் சிரமங்களை பற்றிய கதையே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பல்வேறு கனவுகளுடன் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்கள் பாபி சிம்ஹா, லிங்கா, பிரபஞ்செயன்.

இவர்களில் பாபி சிம்ஹா வித்தியாசமான கதை எழுதி, அதன்மூலம் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால், சென்னையின் சுற்றுப்புற சூழ்நிலை, போதிய வருமானமின்மை போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சரியான கதை எழுத முடியாமல் தவிக்கிறார்.

மற்றொருவரான பிரபஞ்ஜெயன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். லிங்கா சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் பார்க்கும் பெண்களிடமெல்லாம் அசடு வழிகிறார்.

ஒருமுறை கிராமத்திற்கு லிங்கா செல்லும்போது அங்கு நாயகியை பார்க்கிறார். ஏற்கெனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவரான நாயகியுடன் நட்பாக பழகி வருகிறார் லிங்கா. இந்த நட்பு நாளடைவில் பெரிதாக வளர்கிறது.

ஒருநாள் தேர்வு எழுதுவதற்காக சென்னை வரும் நாயகியும், லிங்காவும் நெருக்கமாக இருக்கிறார்கள். இதனால் நாயகி கர்ப்பமடைகிறார். அவளுடைய கர்ப்பத்தை கலைக்குமாறு லிங்கா வற்புறுத்துகிறார். ஆனால், அவளோ அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இவர்கள் விஷயம் பிரபஞ்ஜெயனுக்கு தெரியவர, இவர்களை சேர்த்து வைக்க போராடுகிறார்.

முடிவில், இவர்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி கிடைத்ததா? பாபி சிம்ஹா வித்தியாசமான கதை எழுதி சினிமாவில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.

பாபி சிம்ஹா ஹீரோவாக அவதாரம் எடுத்து வெளிவந்திருக்கும் முதல்படம். தனது முந்தைய படங்கள் போல் இந்த படத்தில் கொஞ்சம் அழகாக இருக்கிறார்.

நாயகனாக இவரது நடிப்பு ஓகே ரகம்தான். சிம்ஹாவின் நண்பராக வரும் லிங்கா செய்யும் சில்மிஷங்கள் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், சிந்திக்கவும் வைக்கிறது.

நாயகிகளான பனிமலர், நீஷா ஆகியோர் கொள்ளை அழகு. படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பலத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் எந்தவிதமான பிரச்சினைகளில் சிக்கி கொள்கின்றனர், அவர்களின் வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன். படத்தின் சில காட்சிகள் சுவாராஸ்யமாக இருந்தாலும், பல காட்சிகள் சோர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கேற்ற சராசரியான ஒளிப்பதிவை பதிவு செய்திருக்கிறார். கேம்லின்- ராஜா இரண்டு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள் இருந்தாலும் பின்னணி இசை, பாடல்கள் சுமாராகவே உள்ளன.

மொத்தத்தில் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கலாம்

Leave a Reply