மதுரை திருநகரில் ரஜினிமுருகன் சினிமா படப்பிடிப்பு

சினிமா படங்களின் வெற்றியின் பிறப்பிடமாக திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானம் இருப்பதாக கருதி பல இயக்குனர்கள் செண்டிமெண்டாக திருநகரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன்–சூரி நடிக்கும் ‘ரஜினி முருகன்’ சினிமா படப்பிடிப்பு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. குறிப்பாக திருநகர் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஒரு பாடல் காட்சியை இயக்குனர் பொன்ராம் கேமராவில் பதிவு செய்தார்.
பாட்டுக்கு ஏற்ப நடிகர் சிவகார்த்திகேயன்–சூரி மற்றும் நடன குழுவினர் ஆட்டம் போட்டனர். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகமாகிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படம் மதுரையை சுற்றி முழுக்க முழுக்க எடுக்கப்பட்டு வருகிறது. 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. வருகிற 8–ந்தேதி மதுரை பாண்டி கோவில் அருகே படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற வெற்றி படத்தை தந்த இயக்குனர் பொன்ராம் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். படப்பிடிப்பின் இடைவேளையில் ரசிகர் பட்டாளங்கள் போட்டிப் போட்டு கொண்டு நடிகர் சிவகார்த்திகேயனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். அவரும் கையெழுத்திட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.