நடிகர் விவேக் உள்பட 42 நிறுவனங்களுக்கு விருது: கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார்

4b01e2e7-ddbd-441c-b6d8-7fad95a71089_S_secvpf42 கட்டுமான நிறுவனங்களுக்கு கட்டுமான தொழில் விருதினை கவர்னர் கே.ரோசய்யா வழங்கினார். நடிகர் விவேக் உலகளாவிய பசுமை முனைப்பு விருதினை பெற்றார்.
கட்டுமான தொழில் துறையில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் ‘கட்டுமான தொழில்’ மாத இதழ் சார்பில் 3-ம் ஆண்டு ‘கட்டுமான தொழில் விருது’ வழங்கும் விழா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கவர்னர் கே.ரோசய்யா கலந்துகொண்டார்.
விழாவில், இந்திய மனை தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (கெரடாய்) தலைவர் அஜித்குமார் சோர்டியா, அண்ணா பல்கலைக்கழக கட்டமைப்பு பொறியியல் பிரிவு தலைவர் பி.தேவதாஸ் மனோகரன், ‘ரெப்கோ’ வங்கியின் நிர்வாக இயக்குனர் ஆர்.வரதராஜன், சென்னை மரம் இறக்குமதியாளர் சங்க செயலாளர் டி.ராஜசேகர் ஆகியோர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் கட்டுமான தொழிலில் சாதனை புரிந்த நிறுவனங்கள் சார்பில் அதன் பிரதிநிதிகள் கட்டுமான தொழில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
அதன்படி இளைய முன்னணி ஒப்பந்தக்காரர் விருதினை எம்.எஸ்.ஹரிபாபு என்பவருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது தனி நபர் பிரிவு பொறியாளர் வீரப்பனுக்கும், பூகம்ப பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக முத்துமணி உள்ளிட்ட 42 பேருக்கும் கவர்னர் கே.ரோசய்யா விருதுகள் வழங்கினார்.
மரம் நடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பராமரிப்பில் ஆர்வம் மற்றும் அதிக அக்கறை காட்டி வரும் நடிகர் விவேக்குக்கு ‘உலகளாவிய பசுமை முனைப்பு விருது’ வழங்கப்பட்டது.
குறைந்த விலையில் சிறந்த வீடுகளை கட்டுதல், புதுமையான கட்டுமான திட்டங்களை உருவாக்குதல், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான கட்டுமானம், மாபெரும் உள்கட்டமைப்பு, வணிக ரீதியிலான கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கட்டுமான தொழில் விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுமான பொறியியல் பிரிவின் முன்னாள் முதல்வர் ஏ.ஆர்.சாந்தகுமார் வரவேற்று பேசினார். கட்டுமான தொழில் பத்திரிகை ஆசிரியர் சிந்து பாஸ்கர் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply