நடிகர்களைவிட நாய்க்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர்

குள்ளநரிக்கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கி வரும் புதிய படம் ‘எங்க காட்டுல மழை’. இப்படத்தில் மிதுன் மகேஸ்வரன் நாயகனாகவும், ஸ்ருதி ராமகிருஷ்ணன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் அருள்தாஸ், அப்புக்குட்டி, ஷாம்ஸ், மதுமிதா, யோகி ராம் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்துக்கு நா.முத்துக்குமார், சினேகன் பாடல்கள் எழுதியுள்ளனர். கார்த்திக், ரஞ்சித், கானா பாலா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பாடல்களுக்கு ஸ்ரீவிஜய் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஏ.ஆர்.சூர்யா கவனிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத்தின் கதை குறித்து இயக்குனர் கூறும்போது, சென்னையில் எந்த வேலைவெட்டிக்கும் போகாத நாயகனும், ஊரிலிருந்து சென்னைக்கு வந்த அப்புக்குட்டியும் நண்பர்களாகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேரும் சென்னைக்கு வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. இதுபோல் சென்னையில் ஒரு வீட்டில் சோறு போட முடியாமல் ஒரு நாயை துரத்தி விடுகிறார்கள். அந்த நாயும் இவர்களுடன் சேர்ந்துவிடுகிறது. இவர்கள் மூன்று பேரும் மையமாக வைத்து நகர்வதே படத்தின் கதை.

இந்த படத்தில் நாய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறது. படத்தில் நாயகன், மற்றும் அப்புக்குட்டி பேசும் வசனங்களுக்கு நாய் கவுண்டர் வசனம் கொடுப்பது போன்ற காட்சிகள் எடுத்துள்ளோம்.

இந்த நாய்க்கு பிரபல சின்னத்திரை நடிகர் ஆதவன் டப்பிங் கொடுத்திருக்கிறார். இதில் நாயை வைத்து படமெடுப்பதில்தான் ரொம்பவும் கஷ்டப்பட்டோம். அதுக்காக ஏசி கார், சாப்பிட ஐஸ்கிரீம், சிக்கன் என அதிக செலவு செய்துள்ளோம்.

இந்த படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு சேர்ந்து பார்க்ககூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும். இளைஞர்களை கவரும் விதமாக படத்தை எடுத்திருக்கிறோம். இதுவரையிலான படங்களில் அழுக்கு முகம், அழுக்கு சட்டை என வலம்வந்த அப்புக்குட்டி இந்த படத்தில் கலர்புல்லாக வந்திருக்கிறார். அருள்தாஸ் யூனிபார்ம் போடாத போலீஸ் வில்லனாக நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு எங்க காட்டுல மழை என்று பெயர் வைக்க காரணம், என்னுடைய முந்தைய படமான குள்ளநரிக்கூட்டம் படத்தின் தலைப்பை எல்லோரும் நெகட்டிவாக இருக்கிறது என்று கமெண்ட் செய்தனர்.

ஆகையால், இந்த படத்திற்கும் தலைப்பும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கவேண்டும் என்பதற்காக எங்க காட்டுல மழை என்று பெயர் வைத்திருக்கிறோம்.

இவ்வாறு இயக்குனர் கூறினார்.

Leave a Reply