டென்னிஸ் தரவரிசையில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த சானியா மிர்சாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் வாழ்த்து

டென்னிஸ் உலகில் வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் நடைபெற்ற டபுள்யூ.டி.ஏ. ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதையடுத்து, சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்திய வீராங்கனை ஒருவர் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை என்பதால் சானியாவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஓ கே கண்மணி படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் நகருக்கு வந்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சானியா மிர்சாவின் வீட்டிற்கு நேரில் சென்றார். அப்போது, டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற அரிய சாதனை படைத்த சானியாவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த தகவலை சானியா மிர்சா தனது டுவிட்டர் அபிமானிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Leave a Reply