சென்னையில் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: நடிகர்கள்–டைரக்டர்கள் ஓட்டு போட்டனர்

c5eaa5b6-f363-4f98-819d-1d4e131700fb_S_secvpfதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்–நடிகைகள் உள்ளிட்டோர் திரண்டு வந்து ஆர்வமுடன் ஓட்டு போட்டனர்.
தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கே.ராஜன், பவர் ஸ்டார் சீனிவாசன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், ஏ.ஆர்.முருகதாஸ், நாஞ்சில் பி.சி.அன்பழகன், சரண், தயாரிப்பாளர்கள் கே.டி. குஞ்சுமோன், சிவசக்தி பாண்டியன், பிரமிட் நடராஜன் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்ற கந்தசாமி நாயுடு கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி மற்றும் கல்லூரி வாசலில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். தயாரிப்பாளர் சங்க தேர்தல் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், நடிகர் மன்சூர்அலிகான், ஹென்றி, ‘கெட்டப்’ ராஜேந்திரன் ஆகிய 5 பேர் போட்டியிடுகிறார்கள்.
2 துணைத்தலைவர்கள் பதவிக்கு சீனிவாசன், தேனப்பன், கே.ராஜன், கதிரேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு டி.ஜி.தியாகராஜன், வெங்கடேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 73 பேர் களத்தில் உள்ளனர். 2 செயலாளர் பதவிக்கு கலைப்புலி தாணு அணியை சேர்ந்த டி.சிவா, ராதா கிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஓட்டு போட தகுதி உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 967 ஆகும்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார். பிரபு, சத்யராஜ், ராமராஜன், ராஜ்கிரண், நாசர், மனோபாலா, நடிகைகள் ராதிகா, குஷ்பு, தேவயானி, டைரக்டர்கள் டி.ராஜேந்தர், பாக்யராஜ், சுந்தர்.சி. ஆகியோரும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இன்று மாலை 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்துகிறார்.

Leave a Reply