எனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்: அக்ஷரா ஹாசன்

65c7672c-1b86-4068-af11-c0100c2655ef_S_secvpfகமலஹாசனின் இளையமகளான அக்ஷரா ஹாசன் இந்தியில் ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கியுள்ளார். தனுஷ்-அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரியில் படம் வெளிவருகிறது.
ஏற்கெனவே, கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அக்ஷராஹாசனை, தன்னுடைய படத்திற்கும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் பால்கி. அவருடைய அழைப்பை ஏற்று சென்ற அக்ஷராஹாசன், தன்னை அவருடைய படத்தில் உதவி இயக்குனராகத்தான் பணிபுரிய அழைத்துள்ளார் என்று நினைத்துள்ளார். ஆனால், பால்கியோ அவரை ‘ஷமிதாப்’ படத்தில் நடிகையாக்கிவிட்டார்.
இதுகுறித்து அக்ஷரா கூறும்போது, ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. அமிதாப்பச்சனின் ஆர்வமும், நிலைத்தன்மையையும் புதிதாக நடிக்க வந்தவர்களை வெட்கப்பட செய்யும்.
பால்கி சார் அவருடைய படத்திற்கு அழைப்பு விடுத்ததும், முதலில் என்னை உதவி இயக்குனராகத்தான் பணிப்புரிய அழைத்தார் என நினைத்தேன். ஆனால், அவர் ‘ஷமிதாப்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார் என நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.
கதாநாயகிகளின் பொதுவான தோற்றத்தில் இருந்து மாறுபட்டு, பாப் கட் செய்து, பர்பிள் நிறம் பூசப்பட்டு இருந்த தலைமுடியுடன் இருந்த தன்னை கதாநாயகி வேடத்திற்கு எப்படி அழைப்பார்கள் என்னும் எண்ணம்தான் அதற்கு காரணம்.
எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிக ஆச்சரியமான அதே நேரத்தில் எளிமையான விதத்தில் கிடைத்தது. கமலஹாசன், சரிகா, சுருதிஹாசன் போன்ற புகழ்பெற்றவர்கள் இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்துள்ள என்மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தாலும், அவர்களின் தாக்கத்தில் இருந்து வேறுபட்டு புதிய அடையாளத்தை உருவாக்கி கொள்வதில் தான் உண்மையான சவால் இருக்கிறது. நானே எனக்கு ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்.
எனக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், படப்பிடிப்பு தளத்திற்கு ஒன்றும் தெரியாதவரைப் போலவே சென்றேன். இங்கு வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் கொடுக்கப்படுகின்றன.
நமக்கு அளிக்கப்படும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க முயற்சிக்க வேண்டும். ஒரு நடிகையாக நான் எதையும் பிரித்து பார்ப்பதில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் திறன்பட நடிக்க திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply