எதுவுமே சரியா அமையனும்: இயக்குனரை புலம்ப வைத்த சிம்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இருவரும் காதல் முறிவுக்கு பிறகு ஒன்றாக இணைந்து நடித்து வரும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, சிம்பு, கவுதம் மேனன் பாதியில் விட்டுச் சென்ற ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார். அதுதவிர, ‘வாலு’ படத்தை வெளியிடுவதற்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் சிம்பு.

இதனால் பாண்டிராஜ் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ‘இது நம்ம ஆளு’ படத்தின் டிரைலரை வெளியிடும் முன்பே அறிவித்த தேதி நெருங்கும்வரை பின்னணி இசையை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் குறளரசன் என்று பாண்டிராஜ் புலம்பியிருந்தார்.

தற்போது, ‘இது நம்ம ஆளு’ படம் இன்னும் முடிவடையாமல் தள்ளிக்கொண்டே போகிறதே என்ற கவலை பாண்டிராஜை மேலும் புலம்ப வைத்துள்ளது. அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எல்லா படமுமே நல்ல படமா வரவேண்டும் என்றுதான் உழைக்கிறோம். ஆனால், சிலது நல்ல படமா அமையுது, சிலது நல்ல பாடமா அமையுது. சிலது ஏடாகூடமா அமையுது. எதுவுமே அமையனும் என்று டுவிட் செய்துள்ளார்.

பாண்டிராஜின் இந்த புலம்பலுக்கு, சிம்பு ‘இது நம்ம ஆளு’ படத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டாததே காரணம் என்று டுவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால், சிம்புவோ இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

Leave a Reply