இளையராஜா பாடல்களை பயன்படுத்த 5 நிறுவனங்களுக்கு நிரந்தர தடை: ஐகோர்ட்டு உத்தரவு

1cef281b-8e22-4242-a2bf-02dc3b9ec16e_S_secvpfசென்னை ஐகோர்ட்டில், பிரபல இசையமைப்பாளர் ஆர்.இளையராஜா ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்னிந்திய திரைப்படங்களில் கடந்த 1970-ம் ஆண்டு முதல் இசையமைத்து வருகின்றேன். இந்தியாவில் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் நானும் ஒருவனாக திகழ்ந்து வருகின்றேன்.
1993-ம் ஆண்டு லண்டனில் சிம்பொனி இசையமைத்தேன். முழுமையான சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியன் நான்தான். இசைக்காக 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளேன். நான் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன்.
திரைப்பாடல், பக்தி பாடல் என்று 4,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு ‘மெட்டு’ போட்டுள்ளேன். இந்த பாடல்களை எல்லாம் ஒலிப்பரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை.
ஆனால், என்னுடைய அறியாமையை பயன்படுத்தி, அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் என்னுடைய பாடல்களை விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சிலர், 3-வது நபருக்கு என்னுடைய பாடல்கள் மீதான காப்புரிமையை சட்டவிரோதமாக வழங்கியுள்ளனர். இதுசம்பந்தமாக கடந்த ஆண்டு என்னுடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் போலீசில் புகாரும் செய்துள்ளனர். எனவே, எந்த ஒரு அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக இந்த நிறுவனங்கள் என் பாடல்களை கேசட்டில் விற்பனை செய்து, ஒலிப்பரப்புகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்ப, கேசட்டில் விற்பனை செய்ய அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்பவும், விற்பனை செய்யவும் அகி உட்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply