ஆர்யா போன்ற நண்பர்களை எனது படவிழாக்களுக்கு அழைக்க மாட்டேன்: விஷால் வேதனை

8a77a6c5-41e2-4e66-8afe-a259f0d1df01_S_secvpf‘ஆம்பள’ படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் பங்கேற்ற விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
சுந்தர்.சி இயக்கத்தில் நான் நடித்த ‘மதகஜராஜா’ படம் 2012–ல் வரவேண்டியது. ஆனால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. வந்து இருந்தால் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் லாபம் சம்பாதித்து இருப்பார்கள்.
‘மதகஜராஜா’ முடங்கியதால் மனது வலிக்கிறது. அந்த வலியில் இருந்து மீள மீண்டும் சுந்தர்.சி.யுடன் இணைந்து ‘ஆம்பள’ படத்தை எடுத்தேன். இது வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொங்கலுக்கு ‘ஐ’, ‘டார்லிங்’ போன்ற படங்களும் வெளிவந்து நன்றாக ஓடுகின்றன. பொங்கலுக்கு ‘ஆம்பள’ படம் வரும் என்றும் வேறு எவன் வந்தாலும் வெட்டுவேன் என்றும் நான் சொன்னதாக நடிகர் ஆர்யா பேசி இருக்கிறார். அப்படி நான் சொல்லவே இல்லை.
சொல்லாததை ஆர்யா கொளுத்தி போட்டதால் சில நாட்கள் பயத்திலேயே இருந்தேன். யாரேனும் தகராறுக்கு வருவார்களோ, போலீஸ் வீட்டுக்கு வருமோ என்றெல்லாம் பயந்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. இனிமேல் எனது பட விழாக்களுக்கு ஆர்யா போன்ற நண்பர்களை அழைப்பது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.
‘ஐ’, ‘ஆம்பள’ படங்களின் திருட்டு சி.டி.க்கள் வந்துள்ளன. தியேட்டர்காரர்கள் திருட்டு சி.டி.யில் படத்தை எடுக்கவில்லை. தியேட்டரில் சீட்டில் உட்கார்ந்து யாரோ எடுத்து இருக்கிறார்கள். ஒரு தியேட்டரில் படத்தையும், இன்னொரு தியேட்டரில் சவுண்டையும் எடுத்து ‘மிக்சிங்’ செய்துள்ளனர்.
ஹன்சிகா எனக்கு பிடித்த நடிகை. அவருடன் மீண்டும் நடிக்க ஆசை. இலியானாவுடனும் நடிக்க விருப்பம் உள்ளது.
அடுத்து சுசீந்திரன் இயக்கத்திலும், ‘சண்டைக்கோழி’ இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன். ‘ஆம்பள’ வெற்றி பெற்றதால் ‘மதகஜராஜா’ படம் ரிலீசாகும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த படம் எப்போது வந்தாலும் ஜெயிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டைரக்டர் சுந்தர்.சி கூறும்போது, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மாதிரி பல்வேறு நாடுகளுக்கு சென்று ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Leave a Reply